சென்னை:அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரின் மனைவி மேகலா தொடர்ந்த வழக்கு மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறையினரால் கைது செய்ய முடியும் எனவும் வாதிட்டார்.
கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆதாரங்களை சீல் வைத்த கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கைதுக்கான காரணங்களைத் தெரிவித்து நீதிமன்றக் காவலில் வைக்க கோரலாம் எனவும் அவர் விளக்கினார். சட்டவிரோதப் பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது எனவும், ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளபோது, 'ஆட்கொணர்வு மனு' (Habeas corpus) எப்படி தாக்கல் செய்ய முடியும்? எனவும், நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி அமலாக்கத்துறைக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினார்.
இதுசம்பந்தமாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுவார் எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க அனுமதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர் நீதிமன்றக் காவலில் தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், மறுநாள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிகோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது குறித்து உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.
குற்றம்சாட்டப்பட்ட எவரும் நீதிமன்ற நடைமுறைகளால் விரக்தியடையச் செய்ய முடியாது என அமலாக்கத்துறை, அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது தவறானது எனவும் தெரிவித்தார். காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்ற அமலாக்கத்துறை, அதை ஏன் அமல்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால் விசாரிக்க முடியவில்லை என்றால், அதை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம் எனத் தெரிவித்தார்.
மருத்துவர்களிடம் சொல்லி உரிய ஏற்பாடுகளுடன் விசாரணை நடத்தியிருக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட கபில் சிபல், காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிலையில், காவலில் எடுக்காததால், முதல் 15 நாட்களை நீதிமன்றக் காவல் காலமாக கருதக்கூடாது என அமலாக்கத்துறை கோர முடியாது என்றார்.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ஏதேனும் தடை இருந்ததா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், எந்த தடையும் இல்லை. மருத்துவர்களே விசாரணை நடத்த அனுமதித்ததாக அமலாக்கத்துறை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது என்றார்.