சென்னை:18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தை கையாளுவது குறித்த வழக்குகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்து வருகிறது. சிதம்பரத்தில் கடந்த 2022ம் ஆண்டு சிறுமி காணாமல் போனதாக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த காவல்துறை, சிறுமி காணாமல் போகவில்லை என்றும் விருப்பத்துடன் ஒருவருடன் சென்றதாக அறிக்கையை ஏற்று வழக்கை காவல்துறை முடித்தது.
இதுபோல, தருமபுரியில் இருந்து இரு பெண்கள் சென்னைக்கு வந்ததும், பிறகு இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கும் விசாரணைக்கு வந்த நிலையில், சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இதனையடுத்து, தருமபுரி இளம்வயது திருமணம் தொடர்பான வழக்கில், 17 வயதுக்குட்பட்ட இருவரையும் பாதுகாப்பு என்ற பெயரில் காப்பகத்தில் அடைத்து வைத்திருந்ததும், காவல்துறையினர் நடத்திய விதம் குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை குழந்தைகளாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளனர்.