சென்னை:திருமண மண்டபங்கள், விருந்து மண்டபங்கள், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பின்னர், பொது இடங்களான திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் மதுபானம் பரிமாற வகை செய்யும் விதிகள் ரத்து செய்யப்பட்டு, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறும் வகையில் உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் வழங்க வகை செய்யும் வகையில் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டதா என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமர்வு, சட்டமன்றத்தில் வைக்காவிட்டால், அந்த விதிகளுக்கு எந்த சட்ட வலுவும் இல்லை எனத் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை, திருத்த விதிகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தடையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதிகள், திருத்த விதிகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உயர்நீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு கொலை மிரட்டல்! பாகிஸ்தான் வங்கியில் ரூ.50 லட்சம் டெபாசிட் செய்ய உத்தரவு!