தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’கோயில் நிலங்கள் குறித்த விசாரணைக்கு தனி தீர்ப்பாயம்’ - தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் சிலைகள் மாயம், நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணையை தடையின்றி நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

For special tribunal for idol missing and temple land encroachment, MHC landmark judgment
For special tribunal for idol missing and temple land encroachment, MHC landmark judgment

By

Published : Jun 7, 2021, 4:15 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கில், ”தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோயில்கள் உள்ளன. இவற்றில் 8,450 கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை புராதன கோயில்களாகக் கருதப்படுகின்றன. இவற்றில் 44,000 கோயில்களில், 32,935 கோயில்கள் நல்ல நிலையில் உள்ளன. 6,414 கோயில்கள் சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. 530 கோயில்கள் பாதி சிதிலமடைந்த நிலையில் உள்ளன. 716 கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்துள்ளன” என அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பாதி சிதிலமடைந்த, முழுமையாக சிதிலமடைந்த கோயில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று (ஜூன்.07) வழக்கின் முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ”வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதனக் கோயில்களை அதன் தொன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் பட்டியலைத் தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும்.

சிலைகள், நகைகள் பட்டியல் தயாரிக்க வேண்டும்

கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாகத் தயாரிக்க வேண்டும். கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளை பாதுகாக்க நடடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும்.

சிலைகள், நகைகளை புகைப்படங்கள் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டும், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையையும் நிர்ணயிக்க வேண்டும்” எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கோயில் நிலங்கள் குறித்த விசாரணைக்கு தனி தீர்ப்பாயம்

மேலும், ”அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும். கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு, தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்” எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தவிர, ”கோயில்களின் கணக்கு வழக்குகளை மத்தியக் கணக்கு தணிக்கை துறை தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும். மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும். கோயில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிலங்கள், சொத்துகளைத் திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், இது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details