சென்னை:தெற்காசியாவில் முதன்முறையாக இரவு நேர தெரு பந்தயமாக, சென்னை தீவுத்திடலை சுற்றி டிசம்பர் 9, 10 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டியை நடத்தப்படுகிறது. இருங்காட்டுக்கோட்டையில் தனி பந்தய தளம் இருக்கும் நிலையில், தீவுத்திடல் மட்டுமல்லாமல் சென்னை நகரில் இந்த கார் பந்தயத்தை நடத்த தடை விதிக்க கோரி சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த மருத்துவர் ஸ்ரீஹரிஷ் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அந்த மனுவில், இந்த பந்தயத்தை நடத்துவதற்காக மாநில அரசு 48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கார் பந்தய வழித்தடத்திற்காக சுவாமி சிவானந்தா சாலை, காமாராஜ் சாலையில் நேப்பியர் பாலம் முதல் தீவுத்திடல் கொடிமரச்சாலை வரை, அண்ணா சாலை ஆகியவற்றில் சாலை மற்றும் நடைபாதை மாற்றியமைத்தல், சாலை தடுப்பான் அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள 7 கோடியே 40 லட்ச மாநகராட்சி ஒதுக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் துறைமுகம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ராணுவ மற்றும் கடற்படை அலுவலகங்கள் செல்கின்ற வழியில், பந்தய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, துறைமுகத்திற்கு செல்லும் கன ரக வாகனங்களின் போக்குவரத்து, ராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பந்தயங்கள் நடத்தப்படுவதாக வாதிடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் பந்தய களம் இருக்கும் நிலையில், பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில், தீவுத்திடலில் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும் போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும் என்பதால், இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் பாதிக்கும் என குற்றம் சாட்டப்பட்டது.