தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’குவாரிகள் குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்க’ - தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - மாநில செய்திகள்

சென்னை: அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, உரிம விதிகளின் படி குவாரிகள் குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 27, 2021, 4:46 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து, வருவாய் துறை அலுவலர்கள் அரசுக்கு துரோகம் செய்து விட்டதாகவும், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2020ஆண்டு வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிம வளத்துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், குவாரி உரிம விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக அலுவலர்கள் தீவிரம் காட்டினாலும், அரசியல் தலையீடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, உரிம விதிகளின் படி, குவாரிகள், குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இது தொடர்பாக மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தொழில்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய மூத்த பத்திரிகையாளர் என்.ராம்

ABOUT THE AUTHOR

...view details