சென்னை: 2016ஆம் ஆண்டு அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுகூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை புதிதாக உருவாக்கியும் கடந்த 2017ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு மூன்றாவது நாளாக இன்று (நவ.6) விசாரணை நடைபெற்றது. அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, "கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டமானது சட்ட விதிகளின் படி கூட்டப்படவில்லை.