தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு: 122 மனுதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவு! - சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு

சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 122 மனுதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வழக்குச் செலவாக வழங்க சுகாதாரத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு குறித்த வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்
சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு குறித்த வழக்கில் அதிரடி காட்டிய நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 10:55 PM IST

சென்னை:தமிழ்நாடு சுகாதார துறையில் பணியாற்றியவர்களுக்கு முன்தேதியிட்டு, சுகாதார ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசுக்கு எதிராக கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில், 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு' தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (அக்.25) நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட மனுதாரர்கள், "நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. சுகாதாரத்துறை செயலாளரும், பொது சுகாதாரத்துறை இயக்குனரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் இல்லை. போதுமான அவகாசம் வழங்கியும் உத்தரவை அமல்படுத்தவில்லை" என்று மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர், "தகுதியான 132 பேரில் 10 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 122 பேருக்கு உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக எட்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதுள்ளது" என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து, எட்டு வாரங்களில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மனுதாரர்களின் மன உளைச்சல் மற்றும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, 122 மனுதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வீதம் 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயை வழக்குச் செலவாக இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:குற்றங்கள் தொடர்பான ஆய்வில் சென்னை நகருக்கான ரேங்க் என்ன தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details