சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன் என்ற மூன்றாம் பாலினத்தவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜன.09) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (MBC) மூன்றாம் பாலினத்தவர்களைச் சேர்த்துள்ளதாகவும், இதனால் பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர், அந்த சலுகையை இழக்க வேண்டியுள்ளதாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்த்த பின் இதுவரை அந்த ஒதுக்கீட்டில் 1 மூன்றாம் பாலினத்தவர் கூட இட ஒதுக்கீடு சலுகையைப் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.