தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா சிகிச்சைக்கான தொகையை தராத தனியார் நிறுவனம்; 73 வயது முதியவருக்கு ரூ.25,000 வழங்க உத்தரவு!

கரோனா சிகிச்சைக்கு செலவான தொகையை வழங்க மறுத்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட 73 வயது ஓய்வூதியதாரருக்கு வழக்கு செலவாக ரூ.25,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 22, 2023, 9:04 PM IST

சென்னை: கரோனா சிகிச்சைக்கு செலவான தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட 73 வயது ஓய்வூதியதாரருக்கு வழக்கு செலவாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற பொற்கமலம் என்பவர், 2014ம் ஆண்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்திருந்தார். இதற்காக அவரது ஓய்வூதியத்தில் மாதந்தோறும் 350 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று பாதித்த அவர், தென்காசியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதற்காக செலவான 2 லட்சத்து 62 ஆயிரத்து 596 ரூபாயை புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திரும்ப வழங்கக் கோரி காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், கரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படவில்லை எனவும், இணைப்பில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதை எதிர்த்து பொற்கமலம் தாக்கல் செய்த வழக்கை இன்று (ஜூலை 22) விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த், கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காததால், இன்சூரன்ஸ் திட்டங்களில் இணைக்கப்படாத தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்ட நிலையில், 73 வயதான ஓய்வூதியதாரருக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் செயல் மனிதத்தன்மையற்றது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீவிர பாதிப்பு இல்லாதபோதும், இணைப்பு பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தாலும் மருத்துவ செலவுகளை கோர அரசு ஊழியர்களுக்கு உரிமை உள்ளதாக 2022 ஜூன் மாதம் அரசு பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, மருத்துவ செல்வுகளை வழங்கக் கோரி மீண்டும் விண்ணப்பிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அவரது கோரிக்கையை ஏற்று தாமதமின்றி மருத்துவ செலவை வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், 73 வயது ஓய்வூதியதாரரை நீதிமன்றத்தை நாட செய்த இன்சூரன்ஸ் நிறுவனம், மனுதாரருக்கு வழக்கு செலவாக 25 ஆயிரம் ரூபாயை மூன்று வாரங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பதவி உயர்வில் இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு துணை நிற்போம் என உச்சநீதிமன்றம் உறுதி

ABOUT THE AUTHOR

...view details