சென்னை: தேசிய கம்பெனி சட்ட வாரியத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், கட்டாயமாக வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டும் என கடந்த 2017ஆம் ஆண்டு தேசிய கம்பெனி சட்ட வாரிய பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு பொது நல வழக்கை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, தேசிய கம்பெனி சட்ட விதிகளில், ஆடை கட்டுப்பாடு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க எவ்வித அதிகாரமும் வழங்கப்படாத நிலையில், வழக்கறிஞர் அங்கி அணிய வேண்டுமென்று உத்தரவிட முடியாது எனவும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தவிர பிற நீதிமன்றங்களில், தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், அங்கி அணிவது கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோல விதிகள் வகுக்க உயர் நீதிமன்றத்திற்குதான் அதிகாரம் உள்ளது எனக் கூறி, 2017-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.