தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மறு குடியமர்த்தப்படும் குடும்பத்தின் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்க" - சென்னை உயர்நீதிமன்றம் - கல்வி உரிமைச் சட்டம்

ஆக்கிரமிப்புகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மறுகுடியமர்த்தப்படும் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:05 PM IST

சென்னை: சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், மறு குடியமர்த்துவது தொடர்பான அரசின் கொள்கைகள், சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் நகர்புற பாதிக்கப்பட்டோர் தகவல் மற்றும் ஆதார மையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (அக்.27) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மறு குடியமர்த்தப்படும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், கல்வி பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை' என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அரசுத்தரப்பில், சென்னையில் கூவம் நதிக்கரையில் ஆக்கிரமித்து வசித்த 14 ஆயிரத்து 257 குடும்பங்களில், 13 ஆயிரத்து 514 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, வேறு இடங்களில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சட்டப்படி அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த திட்டங்கள் குறித்து பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இத்திட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க உத்தரவிட்டனர்.

மேலும் கல்வி உரிமைச் சட்டப்படி, கல்வி பெறுவது அடிப்படை உரிமை எனவும், அடிப்படை கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்த நீதிபதிகள், மறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:ஆதிதிராவிட மக்களுக்கு 2018-இல் வழங்கிய பட்டா நிலத்தை இன்னும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details