தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல்? - அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு - govt School charging extra fees

சென்னை: அரசுப் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்தி, பள்ளிக் கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

govt School
அரசு பள்ளி

By

Published : Jul 17, 2021, 7:11 PM IST

செங்கல்பட்டு அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக உள்ள முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சனை பணிநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அளித்த மனுவில் கோரிக்கைவைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணமான 50 ரூபாயைத் தவிர கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கும்படி பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

உரிய நடவடிக்கை

சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம். பாஸ்கர் முன்னிலையானார்.

அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து தலைமைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் கட்டணம் வசூல்

இதைப் பதிவுசெய்த நீதிபதி, இந்தச் சுற்றறிக்கையை அனைத்துப் பள்ளிகளின் அறிவிப்புப் பலகையில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா எனப் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, பள்ளிக் கல்வி ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

மாவட்ட வாரியாக அறிக்கைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் பள்ளிக் கல்வி ஆணையர், ஜூலை 27இல் அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, நீதிபதி விசாரணையைத் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: கட்டாய கல்வி உரிமைச் சட்டம்: மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணம் நிர்ணயம்

ABOUT THE AUTHOR

...view details