சென்னை:ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, 2014இல் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் இன்று (ஏப்ரல் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கால்வாய்க்குள்ளும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, அதனை பழையபடி மீட்டெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.