தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை வரசித்தி விநாயகர் கோயிலுக்கு 3 மாதங்களில் அறங்காவலர்களை நியமிக்க உத்தரவு! - chennai high court order

சென்னை பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் கோயிலை நிர்வகிக்க செயல் அலுவலரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதீமன்றம், அறங்காவலர்களை 3 மாதத்தில் நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

chennai high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 26, 2023, 6:58 AM IST

சென்னை: சென்னையில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், பெசன்ட் நகர் வரசித்தி விநாயகர் சத்சங்கத்தினால் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கு அறநிலையத்துறை 2014இல் ஒரு செயல் அலுவலரை நியமனம் செய்தது. இதை எதிர்த்து ஸ்ரீ வரசித்தி விநாயகர் சத்சங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கை 2021 முதல் விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், சிதம்பரம் கோயில் அறங்காவலர் வழக்கை சுட்டிக் காட்டி, “செயல் அலுவலர் பதவி என்பது குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செயல்பட முடியும். மேலும், 2015 செயல் அலுவலர் நியமன விதிகளின் படி ஒரு செயல் அலுவலர் நியமனம் ஐந்து வருடங்கள் மட்டுமே இருக்க முடியும். அதன்படி செயல் அலுவலர் பதவி இந்தக் கோயிலில் காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, அறநிலையத்துறை சத்சங்கம் குறிப்பிடும் 5 அறங்காவலர்களை நியமனம் செய்து, நிர்வாக பொறுப்பை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டு வெளியேற வேண்டும்” என தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:தாயை கவனிக்காத மகளின் சொத்துரிமை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் அறநிலையத்துறை செயல் அலுவலர் கோயிலை விட்டு வெளியேறவில்லை. புதிய அறங்காவலர்களையும் நியமனம் செய்யவில்லை என்பதால், 2022இல் கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டில் இறுதி விசாரணை தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலை செயல் அலுவலர் வைத்து நிர்வாகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என்றார். கோயில் சத்சங்கம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், தனி நீதிபதி அளித்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், அறநிலையத்துறை விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு பிறப்பிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக அறங்காவலர்களை நியமனம் செய்ய வேண்டும். பொறுப்புகளை அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி அவகாசமாக அறங்காவலர்களை 3 மாதங்களுக்குள் நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இந்த தீர்ப்பின் மூலம் பெசன்ட் நகர் கோயில் நிர்வாகத்தில் இனி அறநிலையத்துறை செயல் அலுவலர் நிர்வாகம் செய்ய முடியாது.

இதையும் படிங்க:Nellai:19 வயது இளைஞர் மரணம்; சாதிய படுகொலை இல்லை என எஸ்.பி. அலுவலகம் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details