தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய திரைப்படங்கள் வெளியீட்டின்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு வாதம்! - ரசிகர்கள் சிறப்பு காட்சி

New film Releasing regulation issue: புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பொது அமைதியை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய வழிகாட்டு விதிமுறைகள் பிறப்பிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

New film Releasing issue
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 1:52 PM IST

சென்னை: முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளியிடப்படும் திரைப்படங்கள் ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுத்து வரைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.

சென்னைக்கு மாற்றப்பட்ட இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, ரசிகர்கள் சிறப்புக் காட்சியின்போது திரையரங்குகள் முன்பு 24 மணி நேரமும் பெரும் கூட்டமாக நின்று கொண்டு பட்டாசு வெடிப்பது, ப்ளக்ஸ், கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதால், போக்குவரத்தும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் இந்த காட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதனையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, புதிய திரைப்படங்கள் வெளியாகும்போதும், நிகழ்ச்சிகள் நடைபெறும்போதும், பொது அமைதியைப் பேணவும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் விதிகள் வகுக்கும்படி, தானும் உள்துறைச் செயலாளரும் தமிழக டிஜிபிக்கு எழுதிய கடிதத்தை தாக்கல் செய்து, நிலையான வழிகாட்டு விதிமுறைகளை வகுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரசிகர்கள் காட்சிகளால் எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என மனுதாரர் விளக்கவில்லை எனவும், அரசு உள்துறை செயலாளர் கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை - முதுகெலும்பில் மேற்கொண்ட சிகிச்சை என்ன?

ABOUT THE AUTHOR

...view details