சென்னை:வன பயிற்சியாளர் பணிக்கு, தமிழ் வழியில் பொதுப் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கு, 20 சதவீத ஒதுக்கீடு வழங்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில், 158 வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், வனவியலில் பட்டப்படிப்பு அல்லது இயற்பியல், தாவரவியல் உள்ளிட்ட 15 படிப்புகளில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த மற்ற பாடங்களில் பட்டப் படிப்பு முடித்தவர்கள், தாங்கள் தமிழ் வழியில் படித்திருப்பதால், 20 சதவீத ஒதுக்கீட்டின்படி தங்களை நியமிக்கக் கோரி, ஜீவனா உள்ளிட்ட ஒன்பது பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வனவியலில் பி.எஸ்.சி., பட்டத்தை, தமிழில் படித்தவர்கள் யாரும் இல்லை. மேலும், இதர பட்டங்கள் பெற்றவர்களை பரிசீலிக்கும் போது தான், தமிழ் வழி படித்தவர்களுக்கான ஒதுக்கீடு பொருந்தும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.