தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 18, 2021, 7:12 PM IST

ETV Bharat / state

கோயிலுக்கு சொந்தமான நிலம் விற்பனை: விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

கிருஷ்ணகிரி அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முன்றாவது நபருக்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நடத்த உத்தரவு
விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரியும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்துத் தரக் கோரியும் திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் அவர் 2001ஆம் ஆண்டு கோயிலுக்காக வாங்கப்பட்ட நிலத்தை வெங்கட்ராமன் என்பவருக்கு விற்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் பரம்பரை அறங்காவலர்களாக தேர்தலை நடத்தக் கோரி திருப்பதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராதாகிருஷ்ணன் தரப்பில், "பிரதான சாலையிலுள்ள கோயிலுக்கு தினமும் அதிக பக்தர்கள் வருவதால் காணிக்கை அதிகளவில் வருகிறது. ஆனால் அவற்றை முறையாக செலவிடுவதில் அறங்காவலர்கள் இடையே நிர்வாக குழப்பம் நிலவுகிறது" என தெரிவிக்கப்பட்டது.

திருப்பதி கவுண்டர் தரப்பில், "கோயிலின் அன்றாட பணிகளை முறையாக மேற்கொள்ள ஏதுவாக அறங்காவலர்கள் குழுவின் தலைவர் தேர்தலை நடத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

கோயில் செயல் அலுவலர் தரப்பில், "கோயில் நிலம் விற்கப்பட்டது தொடர்பான பத்திரப்பதிவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, மொட்டை அடிப்பதற்கான இடம் ஆகிய இட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் அறங்காவலர்களால் குடமுழுக்கு நடத்தப்பட்டுவிட்டது. அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான கூட்டத்தை டிசம்பர் 22ஆம் தேதி நடத்த உள்ளோம். வழக்கு தொடர்ந்துள்ள திருப்பதி கடந்த 2019 ஆம் ஆண்டு அறங்காவலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்" என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், "இரு வழக்குகளிலும் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலானவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த அறிக்கை மூலம் தெளிவாவதாக தெரிவித்துள்ளார். அதேசமயம் கோயிலின் அசையா சொத்துக்கள் 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே கோயில் சொத்துக்கள் மூன்றாம் நபர்களுக்கு விற்றது தொடர்பாக விசாரணை நடத்த தகுந்த அலுவலரை நியமிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. அவ்வாறு நியமிக்கப்படும் அலுவலர், கோயிலின் முந்தைய கால வரவு செலவுகளையும் ஆய்வு செய்து, 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என தெரிவித்தார். விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:நெல்லையில் பள்ளி மாணவர்கள் பலி: பள்ளி தாளாளர், கட்டிட ஒப்பந்ததாரருக்கு நீதிமன்ற காவல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details