சென்னை:அரசு நிலங்கள் சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதை தடுக்க தகுந்த சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கோயம்பேட்டை ஒட்டி இருக்கும் அமைந்தகரை தாலுகா, பூந்தமல்லி சாலையில் அரசுக்கு சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்துக்கு சதுர அடி 13 ஆயிரத்து 500 ரூபாய் என்ற விலையில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனை செய்ததாக அரசாணை பிறப்பித்தது.
இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து, 2022ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி திருத்திய அரசாணை தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பாஷ்யம் நிறுவனம் தரப்பில் சரவண பவன் ஓட்டல் பங்குதாரர் ஆர்.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று (செப். 25) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு மனுதாரர் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அளித்த பதில் வருமாறு, "அரசு புறம்போக்கு கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் ரூ.1,575 கோடி செலவில் வணிக வளாகம் கட்டி வருகிறது. அரசு நிலம் தனியார் வர்த்தக பயன்பாட்டுக்கு சட்டவிரோதமாக தந்ததை சட்ட ரீதியாக ஏற்க முடியாது.
கிராம நத்தம் இடத்திற்கு அரசுதான் பாதுகாவலர். அரசுக்கு சொந்தமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வது வியப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதில் ஒட்டுமொத்த பணம் படைத்த அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் பங்கு வகித்துள்ளனர்.