சென்னை: திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மயானம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்ததாகவும், புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்தில் புதைக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனக் கூறி, உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர்.
இதையும் படிங்க: Manipur Video: இன்னும் இதுபோன்ற வீடியோக்கள் நிறைய வரும் - எம்பி அதிர்ச்சி தகவல்!
அந்த அமர்வில், கிராமத்தில் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்த போதும், கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின் கீழ் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை புதைக்கலாமா? புதைக்கக் கூடாதா? என்பது குறித்து ஆய்வு செய்ய, வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர்.