ஈரோடு மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்ப தடை கோரி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், சுவர் எழுப்பினால் ஓடையின் அகலம் சுருங்கி, அதில் ஓடும் தண்ணீர் ஊருக்குள் புகுவதற்கான அபாயம் உள்ளதால் கட்டுமானங்களை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். ஓடையின் போக்கை மாற்றக்கூடாது என கோரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீர் வழிப்பாதையில் குறுக்கீடு ஏற்படுத்தும் வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது. நீரோட்டத்துக்கு தடை ஏற்படுத்தும் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதே நேரத்தில், நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து அந்த புகைப்படங்களின் தொகுப்பை தலைமைச் செயலருக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று (ஏப்ரல்.15) தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன், நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதுவரை சேகரிக்கப்பட்ட தரவுகள் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலின் காரணமாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்க முடியவில்லை. முழுவதுமாக பணிகளை முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் வேண்டும் எனக் கேட்டார்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், செயற்கைக்கோள் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் நடைமுறையை ஒரு வாரத்திற்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பதிவிறக்கம் செய்த நீர் நிலைகளின் செயற்கைகோள் புகைப்படங்களை வருவாய் துறை நில ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் நடைறையை ஜூன் இறுதிக்குள் முடிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அவற்றை ஆராய்வதற்கு நீதிமன்றத்திற்கு சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவைப்படுவதால், இந்த வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: பனைப்பொருட்கள் கலப்பட வழக்கு: மாநில குழுவின் தலைவர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!