சென்னை: சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ஆம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது. கடந்த 2016ஆம் ஆண்டு சேகர்ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை, கோடிக்கணக்கிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் கரன்சிகளை, ஆவணங்களையும் பறிமுதல் செய்தது.
அந்த ஆவணங்களில் இருந்து சேகர் ரெட்டி, மணல் கொள்ளைக்காக 247 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனம், அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இருந்து 217 கோடி ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்திடம் இருந்து 155 கோடி ரூபாயும், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து 197 கோடி ரூபாய் பெற்றுள்ளதும், பின்னர் இந்த தொகை, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கட்சி வேட்பாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, 2014-15 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தின் வருமானம் 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை, அதற்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.