தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"சுடுகாடு கூரை அமைப்பதில் முறைகேடு; உள்நோக்கத்தோடு அரசாணை வெளியிடப்பட்டது" - நீதிமன்றம் கருத்து - issued GO as intention of Scam

Selvaganapathy: எந்த அடிப்படையில் சுடுகாடு கூறைகள் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அரசாணை வெளியிட்டதில் முறைகேடு செய்வதற்கான உள்நோக்கம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 10:41 PM IST

Updated : Nov 1, 2023, 10:57 PM IST

சென்னை:அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 1995, 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த செல்வகணபதி, தமிழகத்தில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதேசமயம், கூட்டுசதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014ஆம் ஆண்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் வாதங்கள் தொடங்கின. தண்டிக்கப்பட்டவர்கள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பில், 'மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகளுக்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதிலும், தலா 23 லட்ச ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில், 17 லட்ச ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது' என கூறப்பட்டது.

இதையும் படிங்க:முழங்கால் அளவு நீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் இன்று (நவ.1) விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தான் அமைச்சராக இருந்த போது 30 ஆயிரம் ரூபாயில் மத்திய அரசின் திட்டப்படி சுடுகாடு அமைக்க சிறந்த கூரைகள் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் 7 கூட்டுறவு சங்கங்களுக்கு இந்த டெண்டர்கள் ஒதுக்கப்பட்டு சுடுகாடு அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. அமைச்சராக டெண்டர் அறிவிப்பு மட்டுமே தனது கவனத்துக்கு வரும் எனவும், அதில் தரம் குறைந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், தான் அதற்கு பொறுப்பல்ல எனவும் கூறப்பட்டது.

சுடுகாடு கூரை அமைத்ததில் எந்த முறைகேடும் செய்யாத நிலையில், மாவட்ட வாரியாக கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களே இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மாவட்ட வாரியாக சங்கங்கள் மட்டுமே நேரடியாக தொடர்பில் இருந்து செயல்பட்டது. அமைச்சருக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மக்கள் நலத்திட்டங்களுக்கான கட்டுமானப் பொருட்களின் தரத்தை உறுதி செய்யாததும் முறைகேடுக்கு வழிவகுக்கும்.

அதற்காக பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் மீது மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும். குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் செல்வகணபதி எந்த அடிப்படையில் சுடுகாடு கூறை அமைக்க வேண்டும் என்ற அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் உள்நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது என கேள்வி எழுப்பிய வழக்கின் விசாரணையை (நவ.3) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:தோல்வி பயத்தால் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை பாஜக அரசு ஒட்டுக்கேட்கிறது: மு.க.ஸ்டாலின் தாக்கு!

Last Updated : Nov 1, 2023, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details