சென்னை:சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்தவர் என்.சங்கர் இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், “எங்கள் ஊரில் ஓடும் திருமணிமுத்தாறு ஆற்று நிலத்தை ஆக்கிரமித்து பழனிச்சாமி, விஸ்வநாதன் உள்பட 6 பேர் சிறிய அளவில் வீடு கட்டிருந்தனர். இதற்கு ஊர் பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து புகார் செய்ததால், அந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
வருவாய் ஆவணத்தில் இந்த நிலம் ஆற்றுப் புறம்போக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தும், அந்த நிலத்தை அதே 6 பேர் மீண்டும் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இந்த 6 பேரும், தங்கள் வீட்டை இடித்து அப்புறப்படுத்தியதற்காக அதிகாரிகளிடம் இழப்பீடு கேட்டு ஏற்கனவே தாக்கல் செய்திருந்தனர்.
அதன் அடிப்படையில் அந்த வழக்கை கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு விட்டது. மேலும், இந்த வழக்கிற்கான கோர்ட்டு செலவுத் தொகையை சம்மந்தப்பட்ட 6 பேரிடமும் வசூலிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவும் பிறப்பித்தது.
இதையும் படிங்க:Dindigul - விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு
ஆனாலும் அந்த நீர் நிலையை மீண்டும் ஆக்கிரமித்து அந்த 6 நபர்கள் வீடு கட்டியுள்ளனர். இது தெரிந்தும் மாவட்ட ஆட்சியர், சேலம் மாநகராட்சி ஆணையர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளனர். தற்போது, அந்த இடத்தில் அவர்கள் கட்டடம் கட்டத் தொடங்கி விட்டனர்.
அரசியல் பலம்:இந்த நிலையில் சம்மந்தப்பட்ட 6 பேருக்கும் அரசியல் செல்வாக்கு உள்ளதால், தங்களுக்கு எதிராக அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெரிவிக்கின்றனர். எனவே, திருமணிமுத்தாறு ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ( ஜூலை 25) இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு அமர்வு, மனுதாரர் ஏற்கனவே முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு, இதே கோரிக்கையுடன் புகார் மனு அனுப்பி உள்ளதாகவும், அந்தப் புகாரின் அடிப்படையில் பொதுப்பணித்துறையுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருவதாக மனுதாரரிடம் தாசில்தார் கூறியதாக கூறப்பட்டது.
எனவே, இந்த வழக்கிற்கு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
இதையும் படிங்க:மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்துவதா? - சென்னைப் பல்கலைக்கழக சமூகவியல் துறை அறிவிப்பால் சர்ச்சை!