சென்னை: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில், ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், 49 டெண்டர் தொடர்பான ஆவணங்கள் 24 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளதால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். அதனால், விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவித்தார்.
அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.சுரேஷ், இதே குற்றச்சாட்டில் தங்கள் தரப்பில் அளிக்கப்பட்டு வரும் புகாரிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதனால் தாங்களும் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்!