சென்னை: கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் மூடப்பட்டுள்ள தக்காளி விற்பனை மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (நவ.26) நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், 1200 சதுர அடி முதல் 2 ஆயிரத்து 400 சதுர அடி அளவு கொண்ட கடைகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த இடம் உள்ளது, 150 முதல் 600 சதுர அடி வரை மட்டும் இடமுள்ள தங்களை போல சிறிய கடைதாரர்கள் மைதானத்தை பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சிஎம்டிஏ தரப்பில் லாரிகளில் வந்து பொருட்களை இடமாற்றம் செய்யும் இடத்தில் விற்பனை செய்யக்கூடாது என்ற விதிகள் உள்ளதாகவும், அதை மீறி அந்த மைதானத்திலேயே விற்பனை நடந்ததால் வாகனங்களை நிறுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.