தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிய ஒப்புதல் பெறாத லாரிகள் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: தனியார் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், உரிய ஒப்புதல்களைப் பெறாத லாரிகள் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

By

Published : Apr 10, 2021, 8:12 PM IST

தென்சென்னை தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 425 பேர், 2 ஆயிரம் லாரிகள் மூலம், சென்னை மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறோம்.

சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லும்போது, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்வதாகக் கூறி அலுவலர்கள், எங்கள் உறுப்பினர்களைத் துன்புறுத்துவதால், தண்ணீர் எடுத்துச் செல்லும் எங்கள் சங்க உறுப்பினர்களின் தண்ணீர் லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் சஞ்ஜுப் பானர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தண்ணீர் எடுக்கவும், கொண்டு செல்லவும் உரிய ஒப்புதல்களைப் பெற்ற லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் மனுதாரர் சங்க உறுப்பினர்கள் ஒப்புதல்களைப் பெற்றுள்ளனரா? என்பதைத் தெரிவிக்காததால், மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரர் சங்க உறுப்பினர்கள் உரிய ஒப்புதல்களைப் பெற்றுள்ளனர் என முடிவுக்கு வர எந்த அடிப்படையும் இல்லாததால், தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.

அதே சமயம், உரிய ஒப்புதல்களைப் பெற்ற தண்ணீர் லாரி உரிமையாளர்கள், அதற்கான ஆதாரங்களுடன் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிகோரி அலுவலர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சசிகலா வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு

ABOUT THE AUTHOR

...view details