சென்னை:தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஜன.3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வாகனங்களிலும், நம்பர் ப்ளேட்களிலும் தேசிய சின்னங்களை தவறாக பயன்படுத்துவது தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது என்பதால் உரிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தவறான வண்ணங்களிலான விளக்குகளை பயன்படுத்தியதாக 4 ஆயிரத்து 456 வழக்குகள், கறுப்பு ஸ்டிக்கர்கள் தொடர்பாக 4 ஆயிரத்து 697 வழக்குகள், தவறான நம்பர் பிளேட் தொடர்பாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது குறுக்கிட்டு நீதிபதி, தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் இல்லை எனச் சுட்டிக்காட்டி, குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என்றும், வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.