சென்னை:நாட்டின் 76வது சுதந்தர தினம், விஜய தசமி, அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29ம் தேதிகளில் தமிழ்நாட்டில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். மாவட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு கடந்த அக்டோபர் 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்தது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதிக்கவில்லை எனறுக் கூறி தமிழ்நாடு காவல்துறை மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு இன்று (நவ.1) நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகினார். தொடர்ந்து பேசிய அவர், "நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என்பதால் மனு மீது வாதிட அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.