சென்னை:நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், கருத்துக்களைப் பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அனைத்து யூடியூப்ர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
யூடியூப் மற்றும் சமூகவலைத்தளங்களில் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர்களில் பிரபலமானவர் சவுக்கு சங்கர். இவர் கடந்த சில காலங்களாகவே திமுக அரசிற்கு தன் யூடியூப் பக்கங்களின் மூலம் தன் கண்டனங்களை வன்மையாகப் பதிவிட்டு வருவதனை வழக்கமாகக் கொண்டுவந்தார்.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் பதிவிட்டு வந்தார். மேலும் யூடியூபர் சவுக்கு சங்கர், அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபானக்கடைக் மூலமாக அதிகமாகப் பணம் வசூலித்து வருகிறார். மின்சாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்து வருகிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னதாக சவுக்கு சங்கர் தம்மைப் பற்றி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும், அவரது கருத்துக்கள் தனது நற்பெயருக்குக் களங்கள் விளைவிக்கும் வகையில் இருப்பதால் அதற்குத் தடைவிதிக்கக் கோரியும், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்கவும் உத்தரவிடக் கோரி அமைச்சர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடச் சவுக்கு சங்கருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தம்மைப் பற்றி அவதூறு கருத்துகளைக் கூறி வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று(ஜூன்16) நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகச் சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். மேலும் தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, இனி கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க:ஆளுநர் தனது அதிகாரத்துக்கு விரோதமாக செயல்படுகிறார் - வைகோ விளாசல்