சென்னை:தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் டிஜிபியுமான திலகவதியின் மகன் பிரபு திலக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கருத்து வேறுபாடு காரணமாக தன்னை பிரிந்து தனது மனைவி வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தனது மனைவியுடன் நாகப்பட்டினத்தில் கடலோர காவல் படை கூடுதல் எஸ்பியாக உள்ள சங்கர் திருமண பந்தத்தை மீறிய தொடர்பை வைத்துள்ளார். அவர் மீது தமிழ்நாடு காவல் பணி நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபிக்கு கடந்த ஜூன் மாதம் புகார் அளித்தேன்.அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தற்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பிரபு திலக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மனுவில், கூடுதல் எஸ்பிக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன என்பதை கருத்தில் கொள்ளாமல் வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்து விட்டதாகவும், அந்த உத்தரவை ரத்து செய்து, கூடுதல் எஸ்பிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோரது அமர்வு, புகார் அளித்து 30 நாள்கள் கடந்தும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பி, வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:'என்எல்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது' - நீதிமன்றம் திட்டவட்டம்!