சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் உள்ள மின் கோபுரங்களை அகற்றவும், மெட்ரோ ரயில் தூண்கள் அமைக்கவும் அனுமதி அளிக்கும்படி தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை 63ஆயிரத்து 246 கோடி ரூபாயில் செயல்படுத்த தமிழக அரசு நிர்வாகம் ஒப்புதல் அளித்து உள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஆலந்தூர் - சோழிங்கநல்லூர் வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் வழித் தடம் செயல்படுத்தப்பட உள்ளது. மேல்மட்ட வழித்தடமாக அமைக்கப்பட உள்ள இந்த வழித்தடத்தில் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மின் கோபுரங்கள் உள்ளதால் மெட்ரோ திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் உள்ள மின் கோபுரத்தை அகற்றவும்; பூமிக்கு அடியில் மின் கம்பிகளை மாற்ற அனுமதிக்கும்படி வனத்துறைக்கு உத்தரவிடக்கோரி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.