தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாலை அணிவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி! - அர்ஜூன் சம்பத்

அம்பேத்கர் பிறந்தநாளன்று, மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இந்து மக்கள் கட்சிக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாலை அணிவிக்க உயர்நீதிமன்றம் அனுமதி
டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாலை அணிவிக்க உயர்நீதிமன்றம் அனுமதி

By

Published : Apr 12, 2023, 9:48 PM IST

சென்னை: ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்க பட்டினப்பாக்கம் காவல் துறையினருக்கு உத்தரவிடைக் கோரி, இந்து மக்கள் கட்சியின் சென்னை வடக்கு மண்டல வழக்கறிஞர் பிரிவு தலைவரான ஏ.அருண்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று (ஏப்ரல் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த காலங்களில் மனுதாரர் கட்சியினர் மாலை அணிவிக்க சென்றபோது சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த முறை அளித்த உத்தரவாதத்தைப்போல மீண்டும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவு அளித்திருந்தார்.

அதன்படி இந்து மக்கள் கட்சி சார்பில், ’பிறரை பற்றி கோஷங்கள் எழுப்ப மாட்டோம். வாத்தியங்கள் ஏதும் வாசிக்க மாட்டோம். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்த மாட்டோம். அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, சந்தனப் பொட்டு, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்க மாட்டோம் மற்றும் காவல் துறை வாகனத்தில் சென்று வருவோம்’ என உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சுந்தர் மோகன், ஏப்ரல் 14ஆம் தேதி மாலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 9 நபர்கள் மட்டும், காவல் துறை வாகனத்தில் சென்று மாலை 4 மணி - 4.30 மணிக்குள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க:50 வருடங்களாக வசித்து வரும் 41 குடும்பங்கள் : வீடுகளை இடிக்க உயர் நீதிமன்ற உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details