சென்னை:இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவனம் போடப்பட்ட இருக்கைகளை விட 4 மடங்கு அதிகமாக டிக்கெட் விற்றதால் அளவிற்கு மீறி மக்கள் கூட்டம் கூடியதாக கூறப்பட்டது.
இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே சென்று இருக்கை கிடைக்காமலும் தவித்தனர். மேலும் ஈசிஆர் சாலைகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளே நுழைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுதொடர்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ACTC நிறுவன இயக்குநர் ஹேமந்த் ராஜா மீது, சுய லாபத்திற்காக மக்களை ஏமாற்றுதல் மற்றும் அதிகளவு மக்களை கூட்டி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹேமந்த் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், ஆகஸ்ட் மாதம் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக டிக்கெட் வாங்கியவர்கள் வந்திருக்கலாம் எனக் கூறி, இரண்டு வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல்: சென்னை விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்க கூடாது - விமான நிலைய இயக்குநர் அறிவுறுத்தல்!