சென்னை:இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களை தொடங்காவிட்டால், அரசின் விளக்கத்தை கேட்காமலேயே தீர்ப்பளிக்கப்படும் என்றும், மேலும் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரிய தமிழக அரசுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னதாக கல்லூரி உதவி பேராசிரியர்களின் பணிமூப்பு தொடர்பாக, வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 22) நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகிய இருவர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் 45 நிமிடங்களுக்கு மேலாக வழக்கின் வாதங்களை முன்வைத்தார். அதனை தொடர்ந்து அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், வழக்கின் வாதங்களை தொடங்குவதற்கு பதிலாக, சிறப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால், வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விசாரணையின் போது மட்டும் அரசு சிறப்பு வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர், தலைமை வழக்கறிஞர் என பலரும் ஆஜராகும் நிலையில், இறுதி விசாரணை நடைபெறும் வழக்குகளில் ஆஜராக வேண்டாமா? என அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.