சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் 2023ம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்தபோது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் இயற்றப்பட்டது. அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றதையடுத்து, அவர்களை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். அதனால் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் உண்டான நிலையில், அதிமுக அலுவலகம் மூடப்பட்டது.
மூடப்பட்ட அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உடைத்து உள்ளே நுழைந்தனர். அதன் பின்னர், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருள்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச் சென்று விட்டதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது.
இந்தப் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இந்த புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக மாநிலங்களை உறுப்பினர் சி.வி சண்முகம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் செயல்படுகின்றனர்.
ஆவணங்களை திருடிய சம்பவத்தை சிவில் பிரச்சினையாக கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் சரியாக இருக்கும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இதற்கிடையே இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.