சென்னை:தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலின, பழங்குடியினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஜனவரி 17ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் சத்தியமூர்த்தி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், "மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் மூன்று மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, பழங்குடியினத்தவர்களுக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை.
இதேபோல, 138 நகராட்சிகளில் 20 நகராட்சி தலைவர் பதவிகள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன, பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 490 பேரூராட்சிகளில் 85 பேரூராட்சிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 3 இடங்கள் பழங்குடியினத்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தச் சட்டத்தின் படியும் அல்லாமல், விதிகளின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரப்பட்டுள்ளது.