சென்னை: மக்களவை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 25 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 10 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள், இத்தொகைகளில் பாதியை டெபாசிட் தொகையாகச் செலுத்த வேண்டும்.
பல ஆண்டுகளாக இத்தொகை உயர்த்தப்படவில்லை என்பதால், இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் அனுப்பிய மனுவைப் பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "தேர்தலுக்கு வேட்பாளர்கள் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு டெபாசிட் தொகையை உயர்த்த வேண்டும். இதன் மூலம், தேர்தலுக்கு அரசு செய்யும் செலவு குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பதால், குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, "வேட்பாளர்கள் டெபாசிட் தொகை சட்டப்படி வசூலிக்கப்படுவதால், அதை உயர்த்தக் கோரிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும்படி உத்தரவிட முடியாது. இந்த வழக்கை பொது நல வழக்காகவும் கருத முடியாது. விளம்பரத்துக்காகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது" எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க:தென்மாவட்டங்களில் மாநாடு மூலம் முதலீடு இல்லை.. தாமாக விசாரிக்க மறுத்த உயர் நீதிமன்றக்கிளை!