தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்துக்கு எதிரான மனு தள்ளுபடி - தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற
சென்னை உயர் நீதிமன்ற

By

Published : Jun 13, 2022, 7:40 PM IST

சென்னை:சென்னை புழல் சிறையில் உதவி சிறை அலுவலராகப் பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "நான் நீலகிரி மாவட்டம், கேரளா எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர். அங்கு 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்தேன். பின்னர் 11 மற்றும் 12ஆம் வகுப்பு ஊரில் இல்லாததால் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் உள்ள பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படித்தேன்.

பின்னர் குரூப்-2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத்துறை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டேன். மேலும் சிறந்த பணி வாய்ப்பை பெறுவதற்காக கடந்த 2021ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதினேன். அப்போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் கேட்கப்பட்டது.

அரசின் இந்த சட்டத்திருத்தம் எனது அடிப்படை உரிமையைப் பாதிக்கிறது. எனவே, புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும். அந்த சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்"என அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா மற்றும் கே. குமரேஷ்பாபு அமர்வு முன்பு இன்று(ஜூன் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "பணிக்கு தகுதி உடைய படிப்பு படிக்கும் வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடியும். மேலும் ஏற்கெனவே இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இதையடுத்து புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஷாலினி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை... மத்திய அரசு அதிரடி...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details