சென்னை: சமீபத்தில் தமிழ்நாடு பாரத ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாரதிய ஜனதா கட்சியில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நட இருப்பதாகப் பாரதிய ஜனதா தரப்பில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிடக் கோரி அரவிந்தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "பல்வேறு அரசியல் கட்சிகளை எதிர் மனுதாரர்களாகச் சேர்த்துத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும் என்றும், சட்ட வரம்புக்கு உட்பட்டு மட்டுமே அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டி உள்ளார். பாஜக கொடிக்கம்பம் நட அனுமதித்தால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதுடன், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது." என மனுவில் கூறியுள்ளார்.