சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், டெல்லியிலிருந்த சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி காவல் துறையினர் கடந்த ஜூன் 16ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
பிணை கோரி அவர் தொடர்ந்த மனுக்கள் ஏற்கனவே செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடிசெய்யப்பட்டன. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
மாணவிகளைத் தூண்டிவிட்டு பொய் புகார்கள்
இந்த நிலையில் பிணை கோரி சிவசங்கர் பாபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவசங்கர் பாபாவுக்குச் சொந்தமான கேளம்பாக்க நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளைத் தூண்டிவிட்டு இந்தப் பொய் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தரமாக நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பொய் வழக்குகள் பதியப்படுவதாகவும், சிவசங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.