சென்னை, சேத்துபட்டு சிக்னலில், காவலர்களுடன் வழக்கறிஞர் தனுஜா ராஜனும், அவரது மகளும் சட்டக் கல்லூரி மாணவியுமான ப்ரீத்தியும் கடுமையாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து தலைமைக் காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு காவல் துறையினர் ஆறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஜாமீன் மறுப்பு
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், புகார்கள் இல்லாமல் தானாக முன்வந்து தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தார்.