சென்னை: நீலகிரி மாவட்டம், குன்னூர் தாலுகா, மைலூர் எஸ்டேட் என்னுமிடத்தில் உள்ள நீலகிரி தேயிலை எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தில், செங்குட்ராயன் மலை கிராமத்திலிருந்து மஞ்சகோம்பை - குள்ளக்கம்பி பிரதான சாலை வரை செல்லும் வண்டிப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப்பகுதியில் அமைந்துள்ள சிறிய தேயிலைத் தோட்டங்களுக்கும், பழங்குடியின கிராமங்களுக்கும் செல்ல இந்த வண்டிப்பாதை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது.
பழங்குடியினர் பாதை மறிப்பு
இந்நிலையில், நீலகிரி தேயிலை எஸ்டேட் நிறுவனத்தினர் இந்தப் பாதையை மறித்து கேட் அமைத்துள்ளனர். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்தபோது, கேட் பூட்டப்பட மாட்டாது என எஸ்டேட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த வாக்குறுதியை மீறி, கேட்டை பூட்டி வைத்திருப்பதால் மலைவாழ் மக்களின் போக்குவரத்தும், சிறிய தேயிலை விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சுப்பையன் என்பவர் முன்னதாக வழக்குத் தொடர்ந்திருந்தார்.
வன்கொடுமை தடை சட்டப்படி குற்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நிலம் எஸ்டேட் நிர்வாகத்துக்குச் சொந்தமானதாக இருந்தாலும், பல ஆண்டுகளாக பொதுப் பாதையாகப் பயன்படுத்தப்பட்ட வண்டிப்பாதையை மறிக்க முடியாது எனவும், பழங்குடியின மக்களைத் தடுப்பதால் இது வன்கொடுமைத் தடைச் சட்டப்படி குற்றம் எனவும் கூறி, தடுப்பை ஒரு வாரத்தில் அகற்றுமாறு உத்தரவிட்டார்.
மேலும், மேற்கொண்டு எந்தத் தடுப்பை ஏற்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அலுவலர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'எம்ஜிஆர் மாளிகை'யாக மாறும் அதிமுக தலைமைக்கழகம்!