சென்னை: சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறு குறு தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பின் தேசிய தலைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், தேசிய செயலாளராக உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக-வைச் சேர்ந்த நடிகை நமீதா, தனது கணவர் சவுந்திரியுடன் கலந்துகொண்டார். அரசு முத்திரை, தேசியக் கொடி, பிரதமர் படம், எம்.எஸ்.எம்.இ. அமைப்பின் முத்திரை ஆகியவற்றைப் பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்துவதாகவும், இதை நம்பி சிறு குறு முதலீட்டாளர்களிடம் வசூலித்த 50 லட்சத்தை முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோர், ரூ 9 லட்சம் திருப்பி கொடுத்த நிலையில் மீதத் தொகை வழங்கவில்லை என சூரமங்கலம் காவல்துறையில் கோபால்சாமி என்பவர் புகார் அளித்திருந்தார்.
பின்னர் இந்த வழக்கு சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகி, "மத்திய அரசின் கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறக்கட்டளை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும், காவல்துறை மிகைப்படுத்திக் காட்டி வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். எந்த மோசடியும் இல்லை, பணம் வாங்கிய புகாரில் பணத்தைத் திருப்பி கொடுத்ததால் சமரசம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது".