தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..! - Salem Additional Sessions Court

Madras High Court: கொலை வழக்கில் குற்றத்திற்கான முழுமையான ஆதாரம் இல்லையென்பதால், சேலம் அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்து, 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 9:41 PM IST

சென்னை:சேலம் மாவட்டம், தென் குமரை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவருக்கும், மல்லிகேஸ்வரி என்பவருக்கும் பொதுவான கிணற்றிலிருந்து சொட்டு நீர் பாசனத்துக்குத் தண்ணீர் எடுப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி இரவு, மல்லிகேஸ்வரி அவரது மகன் செந்தில்குமார், மகள் சத்தியவாணி, மருமகன் யுவராஜ், சம்பந்திகள் மாணிக்கம், தங்கம், மருமகள் கோமதி ஆகியோர் மண்வெட்டி, இரும்புக்கம்பி, கட்டை ஆகியவற்றுடன் வெங்கடாசலத்தின் நிலத்திற்குள் நுழைந்து, சொட்டு நீர்ப்பாசன குழாய்களை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு வந்த வெங்கடாசலமும், அவரது மனைவி பரமேஸ்வரியும் இதை தட்டி கேட்ட போது, வெங்கடாசலத்தை மண்வெட்டியால் தலையில் அடித்து, இரும்பு கம்பியால் தாக்கி, சத்தம்போடாமல் இருப்பதற்காக வாயில் துணியை அடைத்து கிணற்றில் தள்ளியுள்ளதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு ஊர் பொதுமக்கள் கூடிய நிலையில், மல்லிகேஸ்வரி குடும்பத்தார் தப்பி ஓடியுள்ளனர்.

அதன் பின் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் வெங்கடாசலத்தின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, தலைவாசல் காவல் நிலையத்தினர் பதிவுசெய்த கொலை வழக்கை விசாரித்த சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஏழு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஏற்கனவே வெங்கடாசலம் தாக்கப்பட்டதாக அவரது மனைவி சாட்சியம் அளித்தாலும், புகார் அளிக்காத நிலையில், முன்விரோதம் இருந்தது என்பதை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டது.

கிணற்றில் உடல் கிடப்பதாகக் கூறிதான் தீயணைப்புத் துறையையும், காவல்துறையையும் அழைத்துள்ளதாகவும், கொலை என சொல்லவில்லை என்றும், முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர். கொலை செய்யப்பட்ட வெங்கடாசலத்தின் மனைவியின் சாட்சியம் நேரடியாகப் பார்த்ததாக இல்லை எனவும், தலையில் மண்வெட்டியால் அடித்த காயங்களுக்கான தடயங்களோ? ரத்தக்கறையோ? இல்லை எனவும் உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.

சாட்சியங்களிலிருந்து குற்றத்துக்கு முழுமையான ஆதாரம் இல்லை என்றும், குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க காவல்துறை தவறிவிட்டது. ஆகையால் சேலம் அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்து, 7 பேரையும் இந்த நீதிமன்றம் விடுதலை செய்கிறது” என்று தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:கொலை வழக்கில் 2018ஆம் ஆண்டு பெண் ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details