சென்னை:நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை உள்ளிட்டவைகளுக்கு தீங்கு ஏற்படுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தை Unlawful Activities (Prevention) Act (UAPA), இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது பிரயோகப்படுத்த முடியுமா? என்ற கேள்வி விவாதிக்கப்பட வேண்டியது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறி, ஈரோட்டை சேர்ந்த அசிஃப் முஸ்தகீன் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் குற்றவாளி என தீர்ப்பு வந்தாலும் கூட, வழக்கு விசாரணையின் போது காலவரம்பின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியாது எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் கூறி, அசிஃப் முஸ்தகீனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.