சென்னை:சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோர் மாவட்ட அளவில் உள்ள சிறப்பு கோர்ட்டுகள் விடுவித்துத் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், ஊழல் வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரியில் நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்:கடந்த 2001 முதல் 2010 வரை வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் நண்பர் சண்முக மூர்த்தி ஆகியோருக்கு எதிராக 44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ல் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், விருதுநகரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தின் விசாரணைக்காக மாற்றப்பட்டது. பின்னர் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு 2019ம் ஆண்டு மாற்றப்பட்டது. காவல்துறை தரப்பில், அமைச்சர் மற்றும் குடும்பத்தினர் எந்த முறைகேடுகளும் செய்யவில்லை என குறிப்பிடப்பட்டது. அதனடிப்படையில், அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட 3 பேரை விடுதலை செய்து ஜூலை 2023ல் உத்தரவு பிறப்பித்தது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோருக்கு எதிராகக் கடந்த 2006 முதல் 2010 வரையான காலகட்டத்தில் 74 .58 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், வருமான வரித்துறை ஆவணங்களின் அடிப்படையில் 2022 டிசம்பரில் இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமைச்சர் பொன்முடி வழக்கு:கடந்த 2006- 2011ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அமைச்சர் விடுவிக்கப்பட்டதைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
அமைச்சர் ஐ பெரியசாமி: கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு, அதிமுக ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 2023ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம்: கடந்த 2001-2006ம் ஆண்டுகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1 கோடியே 77 லட்சம் ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என, வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ததால், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி:கடந்த 2001- 2006 ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், 2012ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர்கள் தரப்பில் தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதால், அனைத்து தரப்பிலும் இறுதி வாதத்தை முன் வைக்கும் விதமாக பிப் 05 முதல் பிப் 09ம் தேதி வரை பிற்பகல் 3 மணிக்குத் தினமும் விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலை விவசாயி அருள் மீதான குண்டர் சட்டம் ரத்து; வழக்கு முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்..