சென்னை:அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னைப் பற்றி அவர் தெரிவித்த கருத்துகள் தனக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, எடப்பாடி பழனிசாமியை அவதூறு வழக்கின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னையில் உள்ள ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (நவ.28) விசாரணை நடைபெற்றபோது, கே.சி.பழனிசாமி தரப்பில், அவதூறு கருத்திற்கான அனைத்து ஆதரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது தவறானது என வாதிடப்பட்டது.