தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு - குட்கா வழக்கு

Madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Dec 4, 2020, 6:12 PM IST

Updated : Dec 4, 2020, 7:32 PM IST

18:05 December 04

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக, பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏ.,க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி அவற்றை ரத்து செய்தது.

இருப்பினும், தவறுகளை களைந்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து உரிமைக்குழு கூடி மீண்டும் 2ஆவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏ.,க்களும், திமுக.,விலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட கு.க செல்வமும் தனியாக வழக்கு தொடர்ந்தனர். 

அவ்வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்த நிலையில், இடைக்கால தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர், உரிமைக்குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு இன்று(டிச.4) நடைபெற்றது.

சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் உரிமைக்குழு சார்பில் ஆஜராகி இன்று வாதிட்டார். அப்போது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு, உரிமைக்குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளது.  

உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கொண்டு வந்து காட்சிப்படுத்தியதற்கு என சுட்டிக்காட்டி இருந்ததாகவும், தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸில் சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளை காண்பித்ததற்காக என திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேரவை செயல்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக்குழுவை விசாரிக்க உத்தரவிட்டதாகவும், அதன் பேரிலேயே தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்தெந்த பொருட்களை கொண்டு வருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

எது உரிமை, எது உரிமை மீறல் என்பதற்கு ஏதும் பாராளுமன்றத்தாலோ, சட்டப்பேரவையிலோ வரையறை செய்யப்படவில்லை எனவும், மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளித்தார். ஒரு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது, புகை பிடிக்க கூடாது என எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பது போல் தான் சட்டப்பேரவை நடவடிக்கையும் உள்ளது.

 பேச்சுரிமை என்ற போர்வையில், தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளதாகவும், இது சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகக் கருதப்படுகிறது. சபாநாயகர் உரிமைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக்குழு அதன் முடிவை பேரவையில் தாக்கல் செய்யும் எனவும், அதன் பின்னர் பேரவை தான் இதில் இறுதி முடிவெடுக்கும் என தெரிவித்த அவர், பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்கு தொடரும்பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும் எனவும், தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லையென வாதிட்டார்.

தொடர்ந்து, அரசு தரப்பின் வாதத்திற்கு விளக்கமளித்த திமுக தரப்பு வழக்குரைஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த்  திவாரி மற்றும் கு.க.செல்வம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர், உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீசை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு ரத்து செய்தபோது,  இவ்விவகாரம் நடந்து (2017) மூன்றாண்டுகள் ஆகி விட்டதால், அதனை அடிப்படையாக வைத்து தற்போது தண்டிக்க முடியாது என தெரிவித்திருந்ததாகவும், தற்போதைய நிலையிலும் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வின் உத்தரவை பொருத்திப் பார்க்க வேண்டுமென வாதிட்டனர்.

உரிய காரணங்கள் ஏதுமின்றி, சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிமைக்குழு இவ்விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டு, அது உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் கொண்டு வந்தார்கள் என பெயருக்கு திருத்தம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக தலைவர் ஸ்டாலின் மீது உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாலும், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, திமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதாலும், காழ்ப்புணர்ச்சி வெளிபடக்கூடும் என்பதால், உரிமைக்குழுவில் இருந்து தாங்களாகவே ஒபிஎஸ் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் விலகிக் கொள்ள வேண்டுமெனவும், தேவைப்பட்டால் சபாநாயகர் புதிய குழுவை அமைத்து கொள்ளட்டும் என வாதத்தை நிறைவு செய்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Last Updated : Dec 4, 2020, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details