சென்னை:கோவையைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி சக அதிகாரி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப் படை பெண் அதிகாரியை சக அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விமானப் படையின் ராணுவ நீதிமன்றம், விசாரணையை துவங்கியது.
இந்த விசாரணை அப்பெண்ணிற்கு திருப்தி அளிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், விமானப் படைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி, விமானப் படை கல்லூரி கமாண்டண்ட் தாக்கல் செய்த மனுவை ஏற்றது கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம். குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, விமான படைச் சட்டம் குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் விசாரணையை தொடர அவசியம் இல்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளார்.